சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் மேத்யூ ஷார்ட் விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைய நேரம் எடுக்கும் என்பதால், அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றிலிருந்து அவர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடன் பயணித்து வரும் மாற்று வீரராக உள்ள பேட்டிங் ஆல்-ரவுண்டர் கூப்பர் கான்லி, மேத்யூ ஷார்டுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் கைவிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 72.5 ஓவர்கள் வீசப்பட்டன. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 12.5 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கீட்டால் மேற்கொண்டு ஆட்டம் நடைபெறாமல் கைவிடப்பட்டது. இந்த ஆட்டத்தின்போது தான் மேத்யூ ஷார்டுக்கு காயம் ஏற்பட்டது.
இதன்மூலம், தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் அரையிறுதியில் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியாவை செவ்வாயன்று துபாயில் எதிர்கொள்கிறது.
துபாயில் சுழற்பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இடக்கையில் பந்தைச் சுழற்றக்கூடிய திறன்கொண்ட கூப்பர் கான்லியைத் தேர்வு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு முன்பே காயம் மற்றும் ஓய்வு காரணங்களினால் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கேம்ரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இல்லாமல் களமிறங்கியது. தற்போது மேத்யூ ஷார்டையும் இழந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.