கோப்புப்படம் 
விளையாட்டு

காபா டெஸ்ட்: இந்தியாவுக்கு 54 ஓவர்களில் 275 ரன்கள் இலக்கு

மழையைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்கூட்டியே டிக்ளேர் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளது.

இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. மழையால் பெரும்பாலான ஆட்டம் பாதிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது.

இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்திருந்தது.

கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்து 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

185 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் முனைப்பு காட்டி விக்கெட்டுகளை இழந்தது. பேட்டிங் வரிசையையும் மாற்றி ஸ்டீவ் ஸ்மித்தை கீழே இறக்கியது.

33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. டிராவிஸ் ஹெட் 17 ரன்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி வேகமாக ரன்களை எடுத்தார்.

கேப்டன் பேட் கம்மின்ஸ் டி20 பாணியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசினார். இவர் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.

18 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டத்தில் இன்னும் 54 ஓவர்கள் மீதமுள்ளன. மழையைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்கூட்டியே டிக்ளேர் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

இன்றைய நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லையென்றால் அட்டகாசமான ஒரு டெஸ்ட் காத்திருக்கிறது.

இந்திய அணி ஆட்டமிழந்தவுடன் ஏற்கெனவே சுமார் இரண்டரை மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.