படம்: https://x.com/ICC
விளையாட்டு

27 ரன்களுக்கு சுருண்ட மே.இ. தீவுகள்: ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி! | Mitchell Starc

முதல் 15 பந்துகளிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஸ்டார்க்.

கிழக்கு நியூஸ்

கிங்ஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளை 27 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் பகலிரவு டெஸ்டாக கிங்ஸ்டனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் 143 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. கேம்ரூன் கிரீன் 42 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் கிரீன் மற்றும் கம்மின்ஸ் மேற்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால், மிட்செல் ஸ்டார்க் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். முதல் 15 பந்துகளிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஸ்டார்க். அடுத்து வந்த ஸ்காட் போலண்டும் ஹாட்ரிக் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்காக ஹாட்ரிக் எடுத்த 10-வது வீரர் என்ற பெருமையை ஸ்காட் போலண்ட் பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகளில் 7 பேர் டக் அவுட் ஆனார்கள். ஓர் இன்னிங்ஸில் 7 வீரர்கள் டக் அவுட் ஆனது இதுவே முதன்முறை

15 ஓவர்கள்கூட பேட் செய்யாத மேற்கிந்தியத் தீவுகள் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1955-ல் நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே டெஸ்டில் குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத் தீவுகள் தற்போது 27 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதற்கு முன்பு 2004-ல் இங்கிலாந்துக்கு எதிராக 47 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே மேற்கிந்தியத் தீவுகளின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் வென்றார்.