இலங்கையுடனான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பிஜிடி தொடருக்குப் பிறகு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் ஜனவரி 29 அன்று கால் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 232 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் எடுத்தார்கள்.
தொடர்ந்து, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் தடுமாறிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.
நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பின்வரிசை பேட்டர்களும் சொதப்பலாக விளையாட இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு சுருண்டது. மேத்யூ கூனமென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 489 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இலங்கையை ஃபாலோ ஆன் செய்யுமாறு அழைத்தது ஆஸ்திரேலியா.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கை பேட்டர்கள் தடுமாறினார்கள். 30 ரன்கள், 40 ரன்கள் எடுத்த பேட்டர்கள் அதைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் கூட்டணியை அமைக்காமல் ஆட்டமிழந்தார்கள். கடைசி நேரத்தில் ஜெஃப்ரி வாண்டெர்சே மட்டும் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
54.3 ஓவர்களில் இலங்கை அணி 247 ரன்களுக்கு சுருண்டது. மேத்யூ கூனமென் மற்றும் நேதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன்மூலம், 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டைச் சதம் அடித்த கவாஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.