ANI
விளையாட்டு

சூப்பர் ஓவர் சர்ச்சை: ஷானகாவுக்கு ரன் அவுட் கொடுக்கப்படாதது ஏன்? | Dasun Shanaka | Asia Cup T20 |

விக்கெட் விழுந்துவிட்டால், உடனடியாக பந்து 'டெட்' ஆனதாகக் கருதப்படும். அதாவது...

கிழக்கு நியூஸ்

ஆசியக் கோப்பை டி20யில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் துபாயில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இலங்கையில் தொடக்க பேட்டர் பதும் நிசங்கா சதமடிக்க, அந்த அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமனில் முடிந்ததால், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆட்டத்தில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி, சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். இதன்படி இலங்கை அணி களமிறங்கியது.

அரை சதம் அடித்த குசால் பெரேரா மற்றும் தசுன் ஷானகா தொடக்க பேட்டர்களாக களமிறங்கினார்கள். சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே குசால் பெரேரா ஆட்டமிழந்தார். அடுத்த பேட்டராகவும் சதமடித்த நிசங்கா களமிறங்காமல், கமிந்து மெண்டிஸ் களமிறங்கினார். இவர் ஒரு ரன் எடுத்தார். பிறகு, ஷானகா பேட் செய்தபோது, வைட் மூலம் ஒரு ரன் கிடைத்தது.

சூப்பர் ஓவரின் நான்காவது பந்தை அடிக்கப் பார்த்து அதைத் தவறவிட்டார் ஷானகா. இருந்தாலும், ஒரு ரன்னை ஓடி எடுத்துவிடலாம் என்ற முனைப்பில் மறுமுனை நோக்கி ஓடினார். ஆனால், அங்கிருந்த கமிந்து மெண்டிஸ் ரன்னுக்கு முயற்சிக்காமல் அங்கேயே இருந்தார். அதற்குள் பந்தைப் பிடித்த சஞ்சு சாம்சன் ஸ்டம்புகளை தகர்த்தார். இதனால், ஷானகா ரன் அவுட் ஆனதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இலங்கை பேட்டர்களும் களத்திலிருந்து வெளியேற முற்பட்டார்கள்.

ஆனால், இதற்கிடையில் கீப்பர் கேட்சுக்கு அர்ஷ்தீப் சிங் அவுட் கேட்டார். நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். இந்த இடத்தில் தான் தசுன் ஷானகா மிகச் சாமர்த்தியமாகச் செயல்பட்டார். நடுவர் கேட்சுக்கு அவுட் கொடுத்ததை எதிர்த்து ரெவ்யூவுக்கு சென்றார் ஷானகா. ரெவ்யூவில் பந்து பேட்டில் உரசியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, நடுவர் அவுட் கொடுத்தது திரும்பப் பெறப்பட்டது. சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட்டும் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஷானகா மீண்டும் பேட்டிங் செய்தார்.

சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்த பிறகு தான், கள நடுவர் கேட்சுக்கு அவுட் கொடுத்தார். கேட்ச் பிடித்தது அவுட் இல்லையென்றாலும், ரன் அவுட்டில் ஷானகா அவுட் தானே என்று கேள்வியெழுந்தது. இதனால், களத்தில் குழப்பமும் ஏற்பட்டது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கள நடுவர்களிடம் கலந்துரையாடினார்.

எம்சிசி விதிகளின்படி, விக்கெட் விழுந்துவிட்டால், உடனடியாக பந்து 'டெட்' ஆனதாகக் கருதப்படும். அதாவது விக்கெட்டுக்கான காரணம் என்னவோ, அது நிகழ்ந்த பிறகு ஆட்டத்தில் நிகழும் எதுவும் கருத்தில் கொள்ளப்படாது.

தசுன் ஷானகா விஷயத்தில் கீப்பர் கேட்சுக்கு அர்ஷ்தீப் சிங் முறையிட்டுள்ளார். அதற்கு நடுவர் அவுட் கொடுத்துள்ளார். எனவே, சஞ்சு சாம்சன் பந்தைப் பிடித்தவுடனே ஆட்டம் 'டெட்' ஆனதாகக் கருதப்படும். இதன் பிறகு நிகழ்ந்த எதுவும் எடுத்துக் கொள்ளப்படாது. இதன்படி, கேட்ச் பிடித்த பிறகு சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் கருத்தில் கொள்ளப்படவில்லை. நடுவர் எப்போது அவுட் கொடுத்தாலும், அவுட் கொடுத்ததற்கான காரணம் கேட்ச். எனவே, கேட்ச் பிறகு நடந்த ரன் அவுட் நடுவர்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ரெவ்யூவில் ஷானகா கேட்ச் ஆனது நிரூபனம் ஆகவில்லை. எனவே, நடுவர் தனது முடிவைத் திரும்பப் பெற்றார். ஷானகாவும் மீண்டும் பேட்டிங் செய்தார். ரன் அவுட் ஆன பிறகும், ஷானகா மீண்டும் செய்ய வந்ததற்கு இதுவே காரணம்.

இருந்தபோதிலும், அடுத்த பந்தை தூக்கி அடிக்கப் பார்த்து தேர்ட் மேன் பகுதியில் கேட்ச் ஆனார் ஷானகா. இந்தக் குழப்பம் ஆட்டத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வெற்றி இலக்கான 3 ரன்களை முதல் பந்திலேயே அடைந்தார்.

இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா இதுபற்றி கூறியதாவது:

"விதிப்படி, எதிரணி கேட்சுக்கு முறையிட்டால் தசுன் ஷானகா மூன்றாவது நடுவரிடம் முறையிடலாம். முதலில் எடுக்கப்படும் முடிவே கருத்தில் கொள்ளப்படும். எனவே, ஷானகா ரெவ்யூவுக்கு சென்றார். அதில் அவுட் இல்லை என முடிவானது. அது தான் நடந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது விதிகளைச் சரிசெய்ய இன்னும் சில பகுதிகள் உள்ளன" என்றார்.

Asia Cup T20 | Asia Cup | Dasun Shanaka | Ind v SL | Super 4s | Suryakumar Yadav | Pathum Nissanka | Sanju Samson | Arshdeep Singh | Team India | Asia Cup 2025 |