ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கான விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9 முதல் ஆகஸ்ட் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் குரூப் சுற்றில் செப்டம்பர் 14 அன்று மோதுகின்றன. குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதியடைந்தால் இரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 21-ல் துபையில் மோத வாய்ப்புள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தால் சூப்பர் 4 சுற்றில் அதன் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் துபையில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் இரு அணிகளும் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஒரு போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல்முறை என்பதால், இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்பு காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியின் விளம்பரங்களுக்கான தொகை கடுமையாக அதிகரித்துள்ளது. பிசிசிஐ-யின் ஊடக உரிமையை 2031 வரை சோனி பிக்சர்ஸ் நெட்வோர்க் இந்தியா கைப்பற்றி வைத்துள்ளது.
ஆசியக் கோப்பைப் போட்டியில் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு 10 விநாடிகளுக்கு ரூ. 14 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவல்களின்படி, கோ-பிரெசன்டிங் ஸ்பான்சர்ஷிப் விளம்பரத் தொகுப்பு ரூ. 18 கோடி. அசோசியேட் ஸ்பான்சர்ஷிப் விளம்பரத் தொகுப்பு ரூ. 13 கோடி. ஸ்பாட் பை விளம்பரத் தொகுப்புக்கு 10 விநாடிகளுக்கு ரூ. 16 லட்சம் அல்லது ரூ. 4.48 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் 10 விநாடிகளுக்கு விளம்பரத்தை ஒளிபரப்பு செய்ய அதிகபட்ச விலை ரூ. 16 லட்சம்.
டிஜிட்டல் தளத்தில் வரும் விளம்பரங்களுக்கான விலை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. கோ-பிரெசன்டிங் மற்றும் ஹைலைட்ஸுக்கு தலா ரூ. 30 கோடி. கோ-பவர்ட் தொகுப்புக்கு ரூ. 18 கோடி. அனைத்து டிஜிட்டல் விளம்பரங்களில் 30 சதவீதம் இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ப்ரீ-ரோல்ஸ்: 10 விநாடிக்கு ரூ. 275
(இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்கு - ரூ. 500, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு - ரூ. 750)
மிட்-ரோல்ஸ்: ரூ. 225
(இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்கு - ரூ. 400, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு - ரூ. 600)
கனெக்டட் டிவி விளம்பரங்கள்: ரூ. 450
(இந்தியா விளையாடும் ஆட்டங்களுக்கு - ரூ. 800, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு - ரூ. 1,200)
India Pakistan | Asia Cup T20 | Advertisement | Asia Cup T20 Ads | India v Pakistan | Ind v Pak | Ind vs Pak | India vs Pakistan