ANI
விளையாட்டு

பிக் பாஷ்: சிட்னி தண்டரில் அஸ்வின்! | Ashwin | Big Bash League |

டேவிட் வார்னர் தலைமையிலான அணியில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கானுடன் இணைந்து ஆர் அஸ்வின் விளையாடவுள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட இந்திய முன்னாள் வீரர் ஆர் அஸ்வின் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்மூலம், இந்திய அணிக்காக விளையாடி பிக் பாஷ் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அஸ்வின் பெறுகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் வீரர் அஸ்வின், அண்மையில் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருப்பதாகச் சொல்லி இம்முடிவை எடுத்தார் அஸ்வின். இதன்படி, முதலில் ஐஎல்டி20 போட்டியில் அவர் விளையாடுகிறார். ஐஎல்டி20 வீரர்களுக்கான ஏலப் பட்டியலில் அஸ்வினின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அஸ்வினின் அடிப்படை விலை 1.20 லட்சம் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் அனைவரது விலையும் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐஎல்டி20 போட்டியில் முழுமையாகப் பங்கெடுப்பதாக அஸ்வின் உறுதியளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பிக் பாஷ் போட்டியிலும் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டியிருந்தார். பிக் பாஷ் போட்டியில் சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிட்னி தண்டர் அணி அஸ்வினை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில் அவர் அணியுடன் இணைவார் என சிட்னி தண்டர் அறிவித்துள்ளது. அஸ்வினின் வருகையானது களத்தில் தரத்தையும் அணிக்குள் தலைமைப் பண்பையும் சேர்க்கும் என சிட்னி தண்டர் கருதுகிறது.

சிட்னி தண்டருடன் இணைந்தது பற்றி அஸ்வின் கூறுகையில், "என்னை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதில் தண்டர் தெளிவாக இருக்கிறது. தலைமையுடனான எனது உரையாடல்கள் அற்புதமானதாகக அமைந்தது. என் பணி குறித்து இரு தரப்புக்கும் தெளிவு உள்ளது" என்றார்.

சிட்னி தண்டர் பொதுமேலாளர் டிரென்ட் கோப்லாண்ட் கூறியதாவது:

"அஸ்வின் சிட்னி தண்டரை தேர்வு செய்ததில் மகிழ்ச்சியே. முதல்முறையாகப் பேசத் தொடங்கியது முதல், வெற்றி பெற வேண்டும் என்பதற்கான உத்வேகத்திலும் சிட்னி தண்டர் எதனால் சிறப்பான ஒன்று என்பதைப் புரிந்துகொண்டதிலும் அஸ்வின் எங்கள் அனைவரையும் கவரந்துவிட்டார். புது உத்வேகத்தையும் உலகத் தரம் மிக்க பந்துவீச்சையும் அஸ்வின் கொண்டு வருவார். அவர் அணியுடன் ஒரு தலைவராகவும் ஆலோசகராகவும் இருப்பது இளம் வீரர்களுக்கு விலைமதிப்பற்றது" என்றார்.

சிட்னி தண்டர் அணியின் பயிற்சியாளராக டிரீவர் பேலிஸ் உள்ளார். டேவிட் வார்னர் அணியை வழிநடத்துகிறார். அஸ்வின் தவிர சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து), லாக்கி ஃபெர்குசன் (நியூசிலாந்து), ஷதாப் கான் (பாகிஸ்தான்) ஆகியோர் சிட்னி தண்டரில் வெளிநாட்டு வீரர்களாக உள்ளார்கள். பாகிஸ்தானைச் சேர்ந்த ஷதாப் கான் சுழற்பந்துவீச்சாளர் என்பதால், அவருடன் இணைந்து அஸ்வின் செயல்படவுள்ளார். பிக் பாஷ் போட்டியில் விளையாடும் லெவனில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரூன் பான்கிராஃப்ட், சாம் கான்ஸ்டஸ், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா உள்ளிட்ட பிரபல வீரர்களும் அஸ்வின் இடம்பெற்றுள்ள சிட்னி தண்டர் அணியில் உள்ளார்கள்.

ஐஎல்டி20 போட்டி டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் முழுமையாகப் பங்கேற்பதாக அவர் உறுதியளித்துள்ளதன் மூலம், பிக் பாஷ் போட்டியில் தொடக்கத்தில் அவர் பங்கேற்கப்போவதில்லை.

டிசம்பர் 14 அன்று பிக் பாஷ் போட்டி தொடங்குவதால், முதல் மூன்று வாரங்களுக்கு அஸ்வின் இடம்பெறமாட்டார். ஜனவரி 6, 10, 12 மற்றும் 16 ஆகிய நாள்களில் நடைபெறும் ஆட்டத்தில் மட்டும் அஸ்வினால் பங்கேற்க முடியும் எனத் தெரிகிறது.

பிக் பாஷ் போட்டியில் இதற்கு முன்பு உன்முக்த் சந்த் மற்றும் நிகில் சௌதரி ஆகியோர் விளையாடியுள்ளார்கள். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்தவராகவே உன்முக்த் சந்த் விளையாடினார். உள்நாட்டைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையிலேயே நிகில் சௌதரி விளையாடினார். டாஸ்மானியாவுக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் இவர் அறிமுகமாகியுள்ளார்.

Big Bash | Big Bash League | Ashwin | Sydney Thunder | David Warner | Shadab Khan |