கோப்புப்படம் 
விளையாட்டு

என் கையில் எதுவும் இல்லை: மௌனம் கலைத்த அஸ்வின்! | Ashwin

"தெளிவுபடுத்துமாறு மட்டுமே நான் கேட்டுள்ளேன். அதுவும் ஐபிஎல் போட்டி முடிந்தபிறகே நான் இதைக் கேட்டுவிட்டேன்."

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவரே அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார் அஸ்வின். 2016 முதல் 2024 வரை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலத்தில் சிஎஸ்கேவால் ரூ. 9.75 கோடிக்குத் தேர்வானார் அஸ்வின்.

ஐபிஎல் 2025-ல் 14 ஆட்டங்களில் 9-ல் மட்டுமே அஸ்வின் விளையாடினார். ஐபிஎல் 2009-க்கு பிறகு முதன்முறையாக ஓர் ஐபிஎல் பருவத்தில் 12 ஆட்டங்களுக்கும் குறைவாக விளையாடினார் அஸ்வின். இதில் 9.12 எகானமியில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். எனவே, ஏலத்துக்கு முன்பு அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பிறகு, அணி நிர்வாகத்திடம் அணியில் தன் நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு அஸ்வின் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அஸ்வினே தனது யூடியூப் சேனலில் இதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

"கடந்த ஐபிஎல் பருவத்தில் 9 ஆட்டங்களில் மட்டுமே நான் விளையாடினேன். ஓர் ஐபிஎல் பருவத்தில் 9 ஆட்டங்களில் மட்டுமே நான் விளையாடியது இதுவே முதன்முறை. எந்த ஐபிஎல் அணிக்காக விளையாடினாலும், எப்போதும் நான் எல்லா ஆட்டங்களிலும் விளையாடி விடுவேன். எனக்கு இது முதல் அனுபவமாக இருந்தது.

எனவே, என் தரப்பிலிருந்து தெளிவுபடுத்துமாறு நான் கேட்டேன். ஆனால், ஐபிஎல் போட்டியின்போதே நான் இதைக் கேட்டுவிட்டேன்.

சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் எடுக்க, சிஎஸ்கே அணி ரூ. 18 கோடிக்கு வழி செய்ய வேண்டும். இதற்கு யாரை விடுவிக்கலாம் என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அணியில் நாளை நான் இல்லையெனில், அது அணிக்குப் பலனைத் தரலாம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அது என்னை மட்டுமே சார்ந்தது அல்ல.

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கலாமா வேண்டாமா என்பதன் விருப்பத்தை வீரர் வெளிப்படுத்தலாம். எனவே, தெளிவுபடுத்தச் சொல்லிக் கேட்கலாம். நான் இருக்கும் இப்படியான ஒரு நிலையில், தெளிவுபடுத்துமாறு மட்டுமே நான் கேட்டுள்ளேன். அதுவும் ஐபிஎல் போட்டி முடிந்தபிறகே நான் இதைக் கேட்டுவிட்டேன்.

தற்போது என் கையில் எதுவும் இல்லை. இந்த வதந்திகள் அனைத்தும் வீரரிடமிருந்து வருவதில்லை. சஞ்சு சாம்சனின் நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதுவுமே சொல்லவில்லை. அங்கிருந்தும் இங்கிருந்துமாக வதந்திகள் வந்திருக்கலாம் அல்லது அணி நிர்வாகத்திடமிருந்து வெளியாகியிருக்கலாம். இதில் நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் கடந்தாண்டு ரூ. 9.75 கோடிக்கு சிஎஸ்கே வீரர் ஆனேன். ராஜஸ்தான் ராயல்ஸில் சஞ்சு சாம்சன் ரூ. 18 கோடியில் இருக்கிறார். ரூ. 18 கோடி மதிப்புடைய வீரர் ஒருவரை எடுக்க சிஎஸ்கே நினைத்தால், அவர்கள் ரூ. 18 கோடிக்கான வழியை உண்டாக்க வேண்டும். அல்லது ராஜஸ்தான் ராயல்ஸுடன் நேரடியாக டிரேட் செய்ய வேண்டும். அவரைப் பணத்தின் மூலம் கூட எடுக்கலாம்.

பல கூட்டங்கள் நடக்கின்றன. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. தற்போதைய தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை. தெளிவுபடுத்தச் சொல்லி நான் கேட்கலாம். என் பணி என்ன, என்னை நான் எப்படி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஏற்கெனவே நான் தெளிவுபடுத்தச் சொல்லி கோரியிருக்கிறேன்" என்றார் அஸ்வின்.

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

Ashwin | Chennai Super Kings | CSK