விளையாட்டு

கட்டாயப்படுத்தியதால் ஓய்வு பெற்றேனா?: மௌனம் கலைத்தார் அஸ்வின்! | Ashwin |

"அஜித் அகர்கரிடம் நான் நிறைய பேசவில்லை."

கிழக்கு நியூஸ்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என யாரும் தன்னைக் கட்டாயப்படுத்தவில்லை என இந்திய முன்னாள் வீரர் ஆர் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார்.

அஸ்வினின் ஓய்வு பற்றி பல்வேறு தகவல்கள் அவ்வப்போது பேசப்பட்டு வந்த நிலையில், தனது ஓய்வு முடிவு குறித்து அவரே தற்போது விளக்கமளித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

"நீ ஓய்வுபெற வேண்டும் என என்னிடம் யாரும் கூறவில்லை. அணியில் உனக்கு இடமில்லை என்றும் யாரும் என்னிடம் கூறவில்லை. உண்மையில், ஓய்வு பெறுவதற்கான முடிவை நான் எடுப்பதற்கு முன்பு 2-3 பேர் என்னிடம் ஓய்வு முடிவை எடுக்க வேண்டாம் என்றார்கள். ஆனால், நான் ஓய்வு முடிவை எடுத்தேன். இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று தான் அவர்கள் விரும்பினார்கள்.

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரோஹித் சர்மா கூறினார். கௌதம் கம்பீரும் மறுபரிசீலனை செய்யச் சொன்னார். ஆனால், அஜித் அகர்கரிடம் நான் நிறைய பேசவில்லை. ஓய்வு குறித்து எடுத்த முடிவு மிகவும் தனிப்பட்ட முடிவு. இவையெல்லாம் தனிநபர் சார்ந்த முடிவுகள் தான்" என்று அஸ்வின் கூறினார்.

சர்வதேச டி20 மற்றும் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ரோஹித் சர்மா வசம் இருந்த கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில் வசம் சென்றுள்ளது. இந்திய அணியில் இவர்களுடைய இடம் என்ன என்பது குறித்தும் அஸ்வின் பேசியுள்ளார்.

"2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட் செய்த விதத்தைப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. நிச்சயமாக அவர்களுடனான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கும் என நம்புகிறேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் எதுகுறித்து பேச வேண்டுமோ அதுகுறித்து பேசியிருக்க வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் சேவை இனி தேவையில்லை என எந்தவொரு பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழு உறுப்பினராலும் சொல்ல முடியாது. அவர்களிடம் இருக்கும் அனுபவத்தைக் கடைகளில் வாங்க முடியாது" என்றார் அஸ்வின்.

டெஸ்டில் 537 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 156 விக்கெட்டுகள், சர்வதேச டி20யில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Ashwin | Ashwin Retirement | Rohit Sharma | Gautam Gambhir | Virat Kohli |Ajit Agarkar |