ஐஎல்டி20 போட்டிக்கான ஏலத்தில் இந்திய முன்னாள் வீரர் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
வீரர்களுக்கான ஏலப் பட்டியலில் அஸ்வினின் அடிப்படை விலை 1.20 லட்சம் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் ஏறத்தாழ ரூ. 1.06 கோடி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் வீரர் அஸ்வின், அண்மையில் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்தார் அஸ்வின். இதன்படி, முதலில் ஐஎல்டி20 போட்டியில் அவர் விளையாடுகிறார்.
ஐஎல்டி20 வீரர்களுக்கான ஏலப் பட்டியலில் அஸ்வின் உட்பட 24 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளார்கள். தற்போதைய நிலையில் மொத்தம் 800 வீரர்கள் உள்ளார்கள். ஐஎல்டி20 அணி நிர்வாகங்கள் தங்களுடைய விருப்பப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு, இறுதிப் பட்டியல் வெளியாகும்.
அஸ்வினின் அடிப்படை விலை 1.20 லட்சம் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் அனைவரது விலையும் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐஎல்டி20 போட்டியில் முழுமையாகப் பங்கெடுப்பதாக அஸ்வின் உறுதியளித்துள்ளார். இதன்பிறகு, பிக்பாஷ் லீக் போட்டியில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐஎல்டி20 போட்டி 6 அணிகளைக் கொண்டு நடைபெறுகிறது. டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஏலம் அக்டோபர் 1 அன்று துபாயில் நடைபெறுகிறது.
ஒவ்வோர் அணியும் குறைந்தபட்சம் 19 வீரர்கள் முதல் அதிகபட்சம் 21 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்க் 4 பேர், குவைத்திலிருந்து ஒருவர், சௌதி அரேபியாவிலிருந்து ஒருவர், அசோசியேட் அணிகளிலிருந்து இருவர் கட்டாயம் தேர்வு செய்யப்பட வேண்டும். முழு உறுப்பினர் நாடுகளிலிருந்து கட்டாயம் 11 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆர்டிஎம் முறையை அணி நிர்வாகங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஐக்கிய அரபு அமீரக வீரரைத் தேர்வு செய்ய மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.
ILT20 | ILT20 Auction | Ashwin |