காயம் காரணமாக விலகியுள்ள பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட். 
விளையாட்டு

ஆஷஸ் பகலிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! | Ashes |

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்கிறார்.

கிழக்கு நியூஸ்

ஆஷஸ் பகலிரவு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டுத் தேர்வு குழு அறிவித்துள்ளது.

காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால், பேட் கம்மின்ஸ் இந்த டெஸ்டில் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொண்டார்.

இரண்டாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் பகலிரவு டெஸ்டாக நடைபெறுகிறது. டிசம்பர் 4 அன்று தொடங்கும் இந்த டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஹேசில்வுட் காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி அந்நாட்டு ரசிகர்களிடம் இருந்தது.

ஆனால், இவ்விரு வீரர்களுமே பிரிஸ்பேன் டெஸ்டில் சேர்க்கப்படவில்லை. பெர்த் டெஸ்டில் விளையாடிய அதே 14 வீரர்களைத் தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலியா. அணியில் இடம்பெறாதபோதிலும், பிரிஸ்பேன் செல்கிறார் பேட் கம்மின்ஸ். அங்கு பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவின் இடம் குறித்து கேள்விகள் எழுந்தன. இருந்தபோதிலும், அவர் பிரிஸ்பேன் டெஸ்டில் தொடர்கிறார். பெர்த் டெஸ்டில் அறிமுகமான பிரெண்டன் டாகெட் வேகப்பந்துவீச்சாளராகத் தொடர்கிறார்.

இந்த டெஸ்டுக்காக ஞாயிறன்று பிரிஸ்பேன் செல்கிறது ஆஸ்திரேலிய அணி.

பிரிஸ்பேன் பகலிரவு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நீசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதர்லாண்ட், பியூ வெப்ஸ்டர்.

Ashes: Steve Smith led Australian Squad announced for Brisbane Test excluding Pat Cummins and Josh Hazlewood.

Ashes | Brisbane Test | AUS v ENG | Australia vs England | Josh Hazlewood | Pat Cummins |