ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் 92.97 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும் எனது மகன் போன்றவர் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீ. தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதிகம் எதிர்பார்த்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இம்முறையும் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர் அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் வெற்றியை அவரது குடும்பத்தினர் மிகச்சிறப்பாக கொண்டாடினர். மேலும் நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி பேட்டியளித்த போது, “நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றது தங்கத்திற்கு நிகரானது தான். தங்கம் வென்ற அர்ஷத்தும் என் மகன் போன்றுதான்.
அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவருக்கும் இடையேயான போட்டி என்பது விருப்பு வெறுப்பின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர் வெள்ளி வென்றதே எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நீரஜ் சோப்ரா வீட்டுக்கு வந்தவுடன் அவருக்குப் பிடித்த உணவை நான் சமைத்து கொடுப்பேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.