சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சானியா சந்தோக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்துவீச்சாளர். மும்பைக்காக இளையோர் கிரிக்கெட்டில் விளையாடினார். யு19 இந்திய அணியில் இடம்பிடித்தார். 2020-21-ல் மும்பைக்காக ஹரியாணாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம், உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2022-23 பருவத்தில் இவர் கோவாவுக்கு அணி மாறினார். கோவாவுக்காக விளையாடியபோது தான் லிஸ்ட் ஏ மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவருக்கும் சானியா சந்தோக்குக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு மட்டுமே இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
யார் இந்த சானியா சந்தோக்?
மும்பையில் பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவருடைய பேத்தி தான் சானியா சந்தோக். இன்டர்கான்டினென்டல் விடுதி மற்றும் புரூக்லின் கிரீமெரி ஐஸ் கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தான் ரவி காய் குடும்பத்தினர். சானியா சந்தோக் லண்டனில் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். மிஸ்டர் பாஸ் பெட் ஸ்பா மற்றும் ஸ்டோர் எல்எல்பி (Mr Paws Pet Spa & Store LLP) நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார்.
திருமண நிச்சயதார்த்தம் குறித்து டெண்டுல்கர் மற்றும் காய் குடும்பத்தினர் சார்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.