மெஸ்ஸி ANI
விளையாட்டு

மெஸ்ஸியின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வளிக்க முடிவு: தகவல்

யோகேஷ் குமார்

ஆர்ஜென்டினா கால்பந்துக்கு மெஸ்ஸி ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் அவருடைய ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு அளிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவைக் கடந்த உலகக் கோப்பையில் நிறைவேற்றினார் மெஸ்ஸி. 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு உலகக் கோப்பையை வென்று பதிலளித்தார் மெஸ்ஸி.

இந்நிலையில் அவர் இத்தனை ஆண்டுகளில் ஆர்ஜென்டினா அணிக்காக நிகழ்த்திய சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஆர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான கிளாடியோ கூறியதாவது:

"மெஸ்ஸி கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றபின், ஜெர்சி எண் 10-ஐ வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். மெஸ்ஸியின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் எங்களால் செய்ய முடிந்தது இதுதான்" என்றார்.

2002-ல் ஆர்ஜென்டினா அணி மறைந்த ஜாம்பவான் மரடோனாவின் நினைவாக அவரது ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு அளிக்க முயற்சித்தது. ஆனால், வீரர்கள் கட்டாயமாக ஜெர்சி எண் 1-23 வரை பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் ஃபிஃபா இதற்கு அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.