அன்ஷுமன் ANI
விளையாட்டு

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய முன்னாள் பயிற்சியாளர்: உதவி செய்யுமா பிசிசிஐ?

1974 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார் அன்ஷுமன்.

யோகேஷ் குமார்

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அன்ஷுமன் கெயிக்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பண உதவி தேவைப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

1974 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார் அன்ஷுமன். இவர், இந்தியாவின் மிக வயதான கிரிக்கெட் வீரராக திகழ்ந்த தத்தாஜிராவ் கெயிக்வாட்டின் மகனாவார்.

இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்ட அன்ஷுமன் தலைமையில் இந்திய அணி 2000-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்தது.

அன்ஷுமன் கடந்த சில ஆண்டுகளாகவே ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரை சந்தித்த இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல், அன்ஷுமனுக்கு பண உதவி தேவைப்படுவதாகவும் அவருக்கு உதவ கோரி பிசிசிஐ பொருளாளரிடம் சந்தீப் மற்றும் வெங்சர்கார் ஆகியோர் பேசியதாகவும் மிட்-டே இணைய பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.