விளையாட்டு

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட ஆன்டி பைகிராஃப்ட்: நடந்தது என்ன? | Andy Pycroft | Pakistan | Asia Cup T20 |

ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்துக்கும் தாமதமாகவே வந்தார்கள்.

கிழக்கு நியூஸ்

ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் மேலும் விரிசலை உண்டாக்கியது. இதன் காரணமாக, ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் விளையாடுவது கேள்விக்குள்ளாகியிருந்தது.

எனினும், செப்டம்பர் 14 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசியக் கோப்பையில் நேருக்கு நேர் மோதின. இந்திய அணி பாகிஸ்தானைச் சுலபமாக வீழ்த்தியது.

டாஸ் போட்டபோது இரு அணிகளின் கேப்டன்களும் கைக்குலுக்கிக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காமல் ஓய்வறைக்குச் சென்றார்கள். இது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

டாஸ் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் கைக்குலுக்கிக்கொள்ள வேண்டாம் என ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.

மேலும், பிரச்னைகளுக்குக் காரணமாக ஆன்டி பைகிராஃப்டை போட்டியிலிருந்தே நீக்க வேண்டும் என்றும் ஐசிசியிடம் முறையிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இதற்கு ஐசிசி தரப்பில் பதில் கடிதம் எழுதப்பட்டதாகவும் அதில் போட்டியின் நடுவராக ஆன்டி பைகிராஃப்ட் தொடர்வார் என்றும் ஐசிசி கூறியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நடுவராக ஆன்டி பைகிராஃப்ட் இருந்தார். புதன்கிழமை காலை முதல் பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் தொடருமா என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருந்தது.

இந்தப் பிரச்னை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கைக்குலுக்குவது தொடர்புடைய மொத்தப் பிரச்னைக்குக் காரணம் எனச் சொல்லப்படும் தனது செயலுக்கு ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிறகு விளக்கமளித்தது. இதன்பிறகே, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆட்டம் தொடங்கியது.

ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல், இதுதொடர்பான விசாரணைக்கு ஐசிசி ஆர்வ்ம காட்டியுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஆட்டம் தொடங்கியவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அரசியலையும் கிரிக்கெட்டையும் கலக்கக் கூடாது, கிரிக்கெட்டை விளையாட்டாக விட்டுவிடுங்கள் என்று மோசின் நக்வி கூறினார்.

முன்னதாக, ஆட்டத்துக்கு முன்பு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பை பாகிஸ்தான் ரத்து செய்தது. ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்துக்கும் தாமதமாகவே வந்தார்கள். வீரர்கள் அனைவரும் விடுதியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். இதனிடையே, மோசின் நக்வி லாகூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதன்பிறகு, வீரர்கள் அனைவரையும் மைதானத்துக்குப் புறப்படுமாறு மாலை 5.45 மணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு நேரப்படி டாஸ் போடுவதற்கு சற்று முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை வந்தடைந்தார்கள்.

Andy Pycroft | Pakistan | Asia Cup T20 | Pakistan Cricket Board | PCB | ICC |