விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: 21 வயது அல்கராஸ் சாம்பியன்!

கிழக்கு நியூஸ்

பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயினைச் சேர்ந்த 21 வயது அல்கராஸ் வென்றுள்ளார்.

அல்கராஸ் - ஸ்வெரேவ் இடையிலான இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்ற நடாலை முதல் சுற்றிலேயே வீழ்த்தியவர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். நடாலின் சகநாட்டவரான 21 வயது கார்லோஸ் அல்கராஸ், இதற்குப் பழி தீர்ப்பார் என ரசிகர்கள் நம்பினார்கள். இருவருமே முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் இன்று விளையாடினார்கள். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அல்கராஸ், இதற்கு முன்பு இருமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்வெரேவ், இதற்கு முன்பு எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியையும் வென்றதில்லை.

இந்நிலையில் பரபரப்பாக 5 செட்களுக்கு நடைபெற்ற இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஸ்வெரேவை 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக வென்றார்.