இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டிலிருந்து ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நான்காவது டெஸ்டில் அவர் விளையாடுவாரா மாட்டார் என்ற கேள்வி உள்ளது. காரணம், முதல் மூன்று டெஸ்டுகளில் இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடிவிட்டார்.
இந்நிலையில் தான் இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் வரும் 23 அன்று தொடங்குகிறது. ஆனால், இந்த டெஸ்டுக்கு முன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீபுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் மாற்று வேகப்பந்துவீச்சாளராக உள்ள அர்ஷ்தீப் சிங் ஏற்கெனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பயிற்சியின்போது இவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, மாற்று வேகப்பந்துவீச்சாளராக ஹரியாணாவைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜைச் சேர்க்க இந்திய அணியின் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஏ அணியுடன் அன்ஷுல் கம்போஜ் இங்கிலாந்துக்குப் பயணித்திருந்தார். இரண்டாவது டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால், நான்காவது டெஸ்டில் பும்ரா பங்கேற்பது முக்கியமானதாக மாறியுள்ளது. முதல் மூன்று டெஸ்டுகளிலும் பங்கேற்ற ஒரே வேகப்பந்துவீச்சாளராக உள்ள முஹமது சிராஜ் அதிக ஓவர்களை வீசியிருக்கிறார். இவரைத் தவிர பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷார்துல் தாக்குர் ஆகியோர் அணியில் உள்ளார்கள்.
நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வது சவாலாக உள்ளது.
Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Akash Deep | 4rth Test | Fourth Test | Arshdeep Singh | Jasprit Bumrah