விளையாட்டு

விளையாட்டின் மாண்பை அவமதிக்கிறது...: பிரதமர் மோடிக்கு மோசின் நக்வி பதில்! | Asia Cup T20 |

"பாகிஸ்தானிடம் நீங்கள் எதிர்கொண்ட அவமானகரமான தோல்விகளை வரலாறு ஏற்கனவே பதிவு செய்துள்ளது."

கிழக்கு நியூஸ்

விளையாட்டினுள் போரை இழுப்பது, உங்களது விரக்தியை வெளிப்படுத்துவதோடு, விளையாட்டின் மாண்பை அவமதிக்கிறது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி பிரதமர் மோடிக்குப் பதிலளித்துள்ளார்.

ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாயில் ஞாயிற்றுக்கிழமை மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்தியா.

ஆசியக் கோப்பைப் போட்டியில் கடைசி வரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று முறை விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய கிரிக்கெட் வீரர்களைப் புகழ்ந்து தள்ளினார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது:

"விளையாட்டுக் களத்திலும் ஆபரேஷன் சிந்தூர். முடிவுகளில் மாற்றமில்லை. இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் அந்நாட்டு அமைச்சருமான மோசின் நக்வி பிரதமர் மோடியின் பதிவுக்குப் பதிலளித்துள்ளார்.

"போர்தான் பெருமைக்கான அளவுகோல் என்றால், பாகிஸ்தானிடம் நீங்கள் எதிர்கொண்ட அவமானகரமான தோல்விகளை வரலாறு ஏற்கனவே பதிவு செய்துள்ளது. எந்தவொரு கிரிக்கெட் ஆட்டத்தாலும் உண்மையைத் திருத்தி எழுதிவிட முடியாது. விளையாட்டினுள் போரை இழுப்பது, உங்களது விரக்தியை வெளிப்படுத்துவதோடு, விளையாட்டின் மாண்பை அவமதிக்கிறது" என்று மோசின் நக்வி பதிவிட்டுள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டி தொடங்கியதிலிருந்தே இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டங்கள் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தன. இரு நாட்டு வீரர்களும் கடைசி வரை ஓர் ஆட்டத்தில்கூட கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் பரஸ்பரம் விமர்சனங்களை வைத்து வந்தார்கள். களத்தில் வீரர்களிடையே ஆவேசம் அதிகமாகத் தென்பட்டன.

தொடர்ச்சியாக, இறுதிச் சுற்றில் வென்ற பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்துவிட்டார்கள். இதைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பையை மோசின் நக்வி எடுத்துச் சென்றுவிட்டதாக பிசிசிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | Mohsin Naqvi | PM Modi | Narendra Modi | Operation Sindoor | Ind v Pak | India v Pakistan |