ANI
விளையாட்டு

டி20 தரவரிசை: 2-வது இடத்தில் அபிஷேக் சர்மா

டாப் 10-ல் இருந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோர் சரிவைச் சந்திதுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

ஐசிசியின் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் அபிஷேக் சர்மா 40-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா, வான்கடெவில் 135 ரன்கள் விளாசி பல சாதனைகளை முறியடித்தார். இந்த அசாத்தியமான ஆட்டம் ஐசிசியின் டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

40-வது இடத்திலிருந்து அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேற்றம் கண்டு 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டாப் 10-ல் இருந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோர் சரிவைச் சந்திதுள்ளார்கள்.

திலக் வர்மா ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்திலும் உள்ளார்கள். ஜெயிஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி, 12-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

இங்கிலாந்து டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வருண் சக்ரவர்த்தி மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு இரண்டாவது இடத்தை அடில் ரஷித்துடன் பகிர்ந்துள்ளார். அகீல் ஹொசைன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ரவி பிஷ்னாய் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்தில் உள்ளார். அர்ஷ்தீப் சிங் ஒரு இடம் சரிவைக் கண்டு 9-வது இடத்தில் உள்ளார்.