இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்ட அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார் அபிஷேக் நாயர். கௌதம் கம்பீர் இந்த அணியின் ஆலோசகராக இருந்தார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 8 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவருடன் உதவிப் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரை இந்திய அணி இழந்ததால், பயிற்சியாளர்கள் குழு மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா மீது அழுத்தம் அதிகரித்தது. மோசமான ஃபார்ம் காரணமாக சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடவில்லை.
இந்திய அணியிலிருந்து நீக்கம் இருக்கும் என செய்திகள் வந்துகொண்டிருந்தன. பிஜிடி தொடரை இந்தியா இழந்ததன் காரணமாக உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், பிசிசிஐயால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆஸ்திரேலிய பயணத்துக்குப் பிறகு இந்திய அணியில் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் அபிஷேக் நாயர் மற்றும் சிதான்ஷு கோடக் என இருவருமே இந்திய அணியுடன் இருந்தார்கள்.
எனினும், அபிஷேக் நாயரின் வெளியேற்றம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமலே இருந்தன. பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியாவிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் இதுதொடர்பாக கேட்கப்பட்டது. ஓரிரு நாள்களில் இதுபற்றி தெளிவு கிடைக்கும் என கூறியிருந்தார்.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், அபிஷேக் நாயர் அதற்குள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துவிட்டார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.