அபிஷேக் நாயர் @RanveerAllahbadia
விளையாட்டு

ரோஹித் சர்மாவின் வாழ்க்கையை மாற்றியத் தருணம்: மனம் திறந்த அபிஷேக் நாயர்

யோகேஷ் குமார்

ரோஹித் சர்மா தனது வாழக்கை குறித்த பார்வையை எவ்வாறு மாற்றிக்கொண்டார் என்பதை பற்றி அபிஷேக் நாயர் பேசியுள்ளார்.

2024 ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றதில் அந்த அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயருக்கும் அதிக பங்கிருப்பதாக வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கூறினர். இவர் ரோஹித் சர்மாவின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில், அவர் சமீபத்தில் டிஆர்எஸ் பாட்காஸ்டுக்கு (TRS PODCAST) அளித்த பேட்டியில் ரோஹித் சர்மாவின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார்.

அபிஷேக் நாயர் பேசியதாவது:

“2011-ல் மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ரோஹித் சர்மா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இணைந்திருக்கும் காட்சியை காண்பித்து அதில் ரோஹித் சர்மாவின் வயிற்றுப் பகுதியை சுட்டிக்காட்டினர். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதை மீண்டும் மீண்டும் காட்டினர். அப்போது அவரிடம் நான் உடல் எடையை குறைக்க வேண்டும், இருவரும் சேர்ந்து இதற்கு உழைப்போம் என்றேன். இச்சம்பவம் நடந்த சில நாள்களுக்குப் பிறகு 2011 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. அப்போது அவரிடம் சில மாற்றங்கள் தெரிந்தது. தனது வாழக்கை குறித்த பார்வையை அவர் மாற்றினார். இதன் பிறகு கடுமையாக உழைக்க வேண்டும், 2011 ஐபிஎல் போட்டிக்கு பிறகு, ரசிகர்களுக்கு என் மீது இருக்கும் பார்வையை மாற்ற வேண்டும் என்றார். இதன் பிறகு 45 நாள்களில் 6-8 கிலோ எடையை குறைத்தார். அடுத்த 5-6 வருடங்களில் அனைவரும் ரோஹித்தின் வளர்ச்சி குறித்தும், உழைப்பு குறித்தும் பேசினார்கள். இப்படி தான் அவர் ஹிட்மேனாக உருவானார்” என்றார்.