ANI
விளையாட்டு

ரன் குவித்தால் தான்...: ரோஹித், கோலிக்கு டி வில்லியர்ஸ் சொல்லும் செய்தி! | Rohit Sharma | Virat Kohli |

"இந்திய அணியில் தற்போது இருக்கும் திறமை மற்றும் போட்டியைப் பார்க்கும்போது, ரன்கள் குவித்தாக வேண்டும் என்பது..."

கிழக்கு நியூஸ்

2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20யில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுள்ளார்கள். 2027 உலகக் கோப்பை வரை இருவரும் தாக்குப்பிடிப்பார்களா, இவர்கள் தாக்குப்பிடித்தாலும் பிசிசிஐ தேர்வுக் குழு இதற்கான அனுமதியை வழங்குமா எனப் பல்வேறு கேள்விகள் உள்ளன.

எனவே, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், ரோஹித் சர்மா வசம் இருந்த கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில் வசம் சென்றுள்ளது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் கடைசியாக எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் வெறும் வீரர்களாக சேர்ந்து விளையாடினார்கள். இதன்பிறகு, தற்போது கில் தலைமையில் இருவரும் வெறும் வீரர்களாக விளையாடவுள்ளார்கள்.

2027 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் தாக்குப்பிடித்து விளையாட முடியுமா என்பது பற்றி தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:

"ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஒருநாள் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்படுவதற்கானப் பின்னணியில் இதுவும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

ஷுப்மன் கில் இளம் வீரர், அற்புதமான ஃபார்மில் இருக்கிறார், அட்டகாசமான தலைவர். ரோஹித் மற்றும் கோலி இருக்கும்போது ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது நல்ல முடிவு. அனுபவமிக்க திறமையான இரு ஜாம்பவான்களிடமிருந்து ஷுப்மன் கில் கற்றுக்கொள்வார். அவர்கள் இருவரும் இருப்பது ஷுப்மன் கில்லுக்கு நல்ல விஷயம்.

இருவரும் ஓய்வு பெறாமல் இருப்பதற்கான காரணம், இந்திய அணிக்காக அடுத்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பது தான். ஆனால், அது நடக்குமா எனத் தெரியாது. 2027 உலகக் கோப்பையில் விளையாட நிறைய உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும். ஃபார்மை தக்க வைக்க வேண்டும். நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். இதுதான் தேர்வுக் குழுவினரின் செய்தியாக இருக்கும்.

இந்திய அணியில் தற்போது இருக்கும் திறமை மற்றும் போட்டியைப் பார்க்கும்போது, ரன்கள் குவித்தாக வேண்டும் என்பது இருவருக்கும் நன்றாகவே தெரியும். இவர்கள் இருவரும் உலகக் கோப்பையின்போது அணியில் இருந்தால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய சொத்து. ஆனால், ரன் குவிக்க வேண்டும் என்பது தான் முதன்மையானது" என்றார் ஏபி டி வில்லியர்ஸ்.

AB De Villiers | Virat Kohli | Rohit Sharma | Shubman Gill | India Squad | Team India |