ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆசியக் கோப்பை டி20 இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
எனினும், வெற்றிக்குப் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி விரும்பவில்லை. மோசின் நக்வி பாகிஸ்தானில் அமைச்சராகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் உள்ளார்.
இதன்பிறகு, இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்படாமல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானது. கோப்பை இல்லாமலே, கோப்பை இருப்பது போல பாவித்து வெற்றியைக் கொண்டாடினார்கள் இந்திய வீரர்கள்.
தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இதுபற்றி தெரிவித்துள்ள கருத்து தற்போது விமர்சனங்களைச் சம்பாதித்து வருகிறது.
"ஆசியக் கோப்பையை குறிப்பிட்ட நபர் ஒருவர் வழங்குவது இந்திய அணிக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என நினைக்கிறேன். விளையாட்டில் இதற்கு இடமில்லை என நினைக்கிறேன். அரசியலைத் தள்ளி வைக்க வேண்டும்.
விளையாட்டு என்பது வேறு. அதை விளையாட்டுக் காரணத்துக்காக மட்டுமே கொண்டாட வேண்டும். ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் அதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. எதிர்காலத்தில் இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன்.
இவையனைத்தும் விளையாட்டையும் வீரர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் மிகக் கடினமான நிலையில் கொண்டு நிறுத்தும். அதைப் பார்க்க எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இறுதியில் அதைப் பார்க்க சற்று நன்றாக இல்லாமல் இருந்தது.
கிரிக்கெட் தான் முக்கியம். அதில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணி உண்மையில் மிகவும் வலிமையான அணியாக உள்ளது. டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகி வருகிறது. டி20 உலகக் கோப்பை வெகுதொலைவில் இல்லை. இந்திய அணியிடம் நிறைய திறமைகள் உள்ளன. மிக முக்கியமானத் தருணங்களில் அவர் சிறப்பாக விளையாடுகிறார்கள். அதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது" என்றார் டி வில்லியர்ஸ்.
டி வில்லியர்ஸின் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
Ind v Pak | India v Pakistan | India Pakistan | Asia Cup | Asia Cup T20 | Asia Cup 2025 | Mohsin Naqvi | AB de Villiers | ABD |