கோப்புப்படம் ANI
விளையாட்டு

லக்னௌவில் பஞ்சாப் ஆடுகளப் பராமரிப்பாளரா?: புயலைக் கிளப்பும் ஜாகீர் கான்

"சொந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் லக்னௌ வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் வந்திருப்பார்கள்."

கிழக்கு நியூஸ்

லக்னௌ ஆடுகளம் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு சாதகமானதாக இல்லை என அந்த அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னௌவில் நேற்று மோதின. லக்னௌவில் நடைபெறும் முதல் ஆட்டம் இது. ஆனால், இதில் லக்னௌ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடப்பு ஐபிஎல் பருவத்தில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 1 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு லக்னௌ ஆலோசகர் ஜாகீர் கான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"ஐபிஎல் போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அதன் சாதகமான சூழலைப் பயன்படுத்த அணிகள் முயற்சிக்கும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இதை லக்னௌவின் சொந்த மைதானமாக ஆடுகளப் பராமரிப்பாளர் நினைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. பஞ்சாப் அணியின் ஆடுகளப் பராமரிப்பாளர் ஆடுகளத்தைத் தயார் செய்ததைப்போல இருந்தது. இது சற்று ஏமாற்றமளிக்கிறது.

இது சரி செய்யப்பட வேண்டும். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கும் என நம்புகிறேன். காரணம், நீங்கள் லக்னௌ ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்கிறீர்கள். சொந்த மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் லக்னௌ வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் அவர் வந்திருப்பார்கள்" என்றார் ஜாகீர் கான்.

ஐபிஎல் 2025-ல் ஆடுகளப் பராமரிப்பாளர்கள் மீது வெளிச்சம் பாய்வது இது முதன்முறையல்ல. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளத்தைப் பார்க்க விரும்புவதாக கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.

தான் உள்ள வரை ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் மாற்றப்படாது என்று அதன் ஆடுகளப் பராமளிப்பாளர் சுஜன் முகெர்ஜி கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பிறகு விளக்கமளித்த அவர், "கேகேஆர் கேட்ட ஆடுகளத்தை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. நாங்கள் நீண்டகாலமாக நல்ல உறவுடன் இருக்கிறோம். பிசிசிஐ வழிகாட்டுதல்களின்படி ஆடுகளத்தைத் தயாரித்துள்ளேன். என்னைக் குற்றம்சாட்டுபவர்களுக்கு ஒன்றும் தெரியாது" என்றார்.

பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "சேப்பாக்கம் ஆடுகளம் சிஎஸ்கேவுக்கு சாதகமானதாக இல்லை. சேப்பாக்கத்துக்கு வெளியே சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். சேப்பாக்கம் ஆடுகளத்தை எங்களால் கணிக்க முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்த சில வருடங்களாகவே எங்களால் சேப்பாக்கம் ஆடுகளத்தைக் கணிக்க முடியவில்லை. இது புதிதல்ல. பழைய சேப்பாக்கத்தில் எந்த யோசனையும் இல்லாமல் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். ஆனால், இது பழைய சேப்பாக்கம் கிடையாது. ஒவ்வொரு ஆடுகளத்தின் தன்மையையும் புரிந்துகொள்ள கடுமையாக முயற்சிக்கிறோம். ஆனால், ஒவ்வொன்றும் வேறாக உள்ளன" என்றார் ஃபிளெமிங்.

ஐபிஎல் 2025-ல் ஆடுகளங்கள் பற்றி சொந்த அணியின் பயிற்சியாளர்கள்/ஆலோசகர்கள் குற்றம்சாட்டி வருவது கவனம் ஈர்த்துள்ளது.