3rd Test, Lord's, India tour of England. Root 99* overnight as England grind through opening day
லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
நல்ல கூட்டத்துடன் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட் பாணியைக் கைவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரிய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆரம்பத்திலேயே பேட்டைச் சுழற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஒரு திட்டத்துடன் இன்று விளையாடினார்கள். 13 ஓவர்கள் வரை விக்கெட் விழவில்லை. ஆச்சர்யமாக 14-வது ஓவரை வீச வந்தார் நிதிஷ் குமார் ரெட்டி. அந்த ஓவரின் முடிவில் அவர் கையில் இரு விக்கெட்டுகள் இருந்தன. பென் டக்கெட்டை 23 ரன்களிலும் ஸாக் கிராலியை அற்புதமான பந்தில் 18 ரன்களிலும் வீழ்த்தினார். இதன்பிறகு அடுத்த விக்கெட்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது இந்தியா. உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 83/2 என இருந்தது. தேநீர் இடைவேளையின்போதும் விக்கெட் எதையும் இழக்காமல் 153/2 என இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தது இங்கிலாந்து. ஆனால் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது முதல் பந்திலேயே போப்பை 44 ரன்களுக்கு வீழ்த்தினார் ஜடேஜா. ரிஷப் பந்துக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் மாற்று விக்கெட் கீப்பராக ஜுரெல் செயல்பட்டார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து பேட்டரான ஹாரி புரூக், பும்ராவின் அற்புதமான பந்தில் 11 ரன்களுக்கு போல்ட் ஆனார்.
இந்தத் தொடரில் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே எடுத்திருந்த ஜோ ரூட், இன்று தன் திறமையை நன்குப் வெளிப்படுத்தினார். நிதான ஆட்டத்தைக் கவசமாகக் கொண்டு அழகாக ரன்கள் சேர்த்தார். 102 பந்துகளில் அரை சதமடித்த ஜோ ரூட், நாள் இறுதியில் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஸ்டோக்ஸும் 102 பந்துகள் விளையாடி 39 ரன்கள் மட்டுமெ எடுத்தார். எதனால் பாஸ்பால் ஆட்டத்தைத் இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது ரசிகர்கள் மனதில் உள்ள கேள்வி.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணிக்குப் புதிய பந்து கிடைத்தாலும் அதில் 2.5 ஓவர்கள் மட்டுமே வீச சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் உரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இங்கிலாந்து 83 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாளில் இதேபோல சிறப்பாக விளையாடி 450 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து எடுக்குமா என்று பார்க்கவேண்டும்.
2-வது நாள் ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று வர்ணனையில் குறிப்பிட்டார் நாசிர் ஹுசைன். இந்திய அணி இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?