ANI
விளையாட்டு

ஜேமி ஸ்மித், புரூக் மிரட்டல் சதம்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலை!

முதல் 5 விக்கெட்டுகள் 84 ரன்களுக்கும் கடைசி 5 விக்கெட்டுகள் 20 ரன்களுக்கும் வீழ்ந்த நிலையில்...

கிழக்கு நியூஸ்

முதல் 5 விக்கெட்டுகள் 84 ரன்களுக்கும் கடைசி 5 விக்கெட்டுகள் 20 ரன்களுக்கும் வீழ்ந்த நிலையில் நடுவில் 303 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியில் 6 பேட்டர்கள் டக் அவுட். ஆனாலும் இரு சதங்கள். ஒருவர் 184 ரன்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் எடுத்த எந்த அணியிலும் இத்தனை பேர் டக் அவுட் ஆனதில்லை. இப்படியாக பல ஆச்சர்யங்களை அளித்தது பிர்மிங்ஹமில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட்.

இன்று காலையில் இரு பந்துகளில் ரூட், ஸ்டோக்ஸ் என இரு பெரிய தலைகளின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். அப்போது இங்கிலாந்து அணி 84/5 என தடுமாறிக் கொண்டிருந்தது. இந்திய ரசிகர்கள் 300 ரன்கள் முன்னிலை பெறலாம் எனக் கனவுகண்டு கொண்டிருந்தார்கள்.

இதன்பிறகு நடந்தது தான் யாரும் எதிர்பாராதது. ஹாரி புரூக்கும் ஜேமி ஸ்மித்தும் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பவுண்டரிகளை இருவரும் விடாது அடித்துக்கொண்டே இருந்தார்கள். புரூக் 73 பந்துகளிலும் ஸ்மித் 43 பந்துகளிலும் அரை சதமடித்தார்கள். இங்கிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. கூட்டணி 150 ரன்களைக் கடந்தது. கண்மூடித் திறப்பதற்குள் 80 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார் ஸ்மித். அடுத்ததாக புரூக்கும் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது. தேநீர் இடைவேளையின்போது 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் கலக்கம் அடைந்தார்கள். பிறகு ஸ்மித், புரூக் என இருவருமே 150 ரன்களைக் கடந்தார்கள். இரும்புக் கோட்டையாக இருந்த இந்தக் கூட்டணியை உடைத்தார் ஆகாஷ் தீப். 158 ரன்கள் எடுத்திருந்த புரூக்கை போல்ட் செய்தார். இதன்பிறகு மீதமுள்ள விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி சிரமப்படவில்லை. இங்கிலாந்து 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜேமி ஸ்மித் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 407 ரன்கள் எடுத்தார். இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸை அற்புதமாகத் தொடங்கியது. ஜெயிஸ்வாலும் ராகுலும் அழகான பவுண்டரிகளை அடித்தார்கள். ஜெயிஸ்வால் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுலின் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

3-வது நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ராகுல் 28, கருண் நாயர் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.