சென்னையில் நடைபெற்ற பரபரப்பான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக தொடரிலிருந்து நிதிஷ் ரெட்டியும் இரு ஆட்டங்களில் ரிங்கு சிங்கும் விலகியதால் இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருந்தன. வாஷிங்டன் சுந்தரும் துருவ் ஜுரெலும் அணியில் இடம்பெற்றார்கள். இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் அறிமுகமானார்.
பவர்பிளேயில் பில் சால்ட், பென் டக்கெட்டின் விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்தியது. இன்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஓவர்கள் வீசி இங்கிலாந்துக்குச் சிரமம் அளித்தார்கள். ஹாரி புரூக் 13 ரன்களில் மீண்டும் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்ட் ஆனார். கேப்டன் ஜாஸ் பட்லரைத் தவிர இதர நடுவரிசை பேட்டர்களால் நீண்ட நேரம் நிலைத்து விளையாட முடியவில்லை. பட்லர் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் பிரைடன் கார்ஸ் 3 சிக்ஸர்கள் அடித்து 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளத்தில் 10,15 ரன்கள் குறைவாகவே எடுத்ததாகக் கருதப்பட்டது.
இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் அபிஷேக் சர்மா. பிறகு ஒரு ரன்னும் சேர்க்காமல் அடுத்த ஓவரில் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 5 ரன்களுடன் ஆர்ச்சர் பந்தில் வீழ்ந்தார். சூர்யகுமாரும் திலக் வர்மாவும் பவர்பிளேவில் விரைவாக ரன்கள் எடுத்து 5 ஓவர்களில் 51/2 என்கிற நிலைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் 6-வது ஓவரில் 12 ரன்களுக்கு கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் சூர்யகுமார். ஜுரெல் 4, பாண்டியா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 9.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது இந்திய அணி. பிறகு திலக் வர்மாவும் வாஷிங்டன் சுந்தரும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். 13-வது ஓவரில் வுட் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் வாஷிங்டன். ஆனால் அடுத்த ஓவரில் கார்ஸ் பந்தில் 26 ரன்களுக்கு வீழ்ந்தார். அடுத்த ஓவரில் அக்ஷர் படேல் 2 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்ததால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 39 பந்துகளில் அரை சதமெடுத்தார் திலக் வர்மா. கடைசிக்கட்டத்தில் பட்லரின் வியூகத்தில் வீழ்ந்தார் அர்ஷ்தீப் சிங். இதனால் மேலும் சீட்டின் நுனிக்குச் சென்றார்கள் ரசிகர்கள். அடுத்து வந்த பிஸ்னாய் அற்புதமாக இரு பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குத் தன்னாலான பங்களிப்பை அளித்தார்.
திலக் வர்மா கடைசிவரை பக்குவமாகவும் புத்திசாலித்தனமாகவும் விளையாடியதால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. மேலும் டி20 தொடரில் 2-0 என முன்னிலையையும் அடைந்தது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
டி20யில் கடைசியாக ஆட்டமிழந்த பிறகு இதுவரை 174 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 318 ரன்கள் எடுத்துள்ளார் திலக் வர்மா. ஸ்டிரைக் ரேட் - 182.75. என்ன ஓர் அற்புதமான வீரர்.