13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி தனது வயதைக் குறைத்து காட்டி ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை.
பீஹாரைச் சேர்ந்த 13 வயது இடக்கை பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார்.
அடிப்படை விலை ரூ. 30 லட்சத்தில் இருந்தவரைத் தேர்வு செய்ய ராஜஸ்தானும் தில்லியும் போட்டியிட்டன. கடைசியில் ராகுல் டிராவிடின் ராஜஸ்தான் அணியால் ரூ. 1.10 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டு ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
2011-ல் பிறந்த சூர்யவன்ஷி, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் 12 வயதில் பீஹார் ரஞ்சி அணிக்குத் தேர்வானார். சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியிலும் இடம்பிடித்தார். சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். இப்போது ஐபிஎல் அணியிலும் இடம்பிடித்து விட்டார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி தனது வயதைக் குறைத்து காட்டி ஏமாற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது.
2023-ல் வைபவ் சூர்யவன்ஷி பேசிய ஒரு காணொளியில் அவர் குறிப்பிட்டதை வைத்து பார்க்கும்போது, அவருக்கு அப்போதே 14 வயது என்றும் தற்போது அவருக்கு 15 வயதை கடந்திருக்கும் என்றும் புகார்கள் எழுந்தன.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், “வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய 8 1/2 வயதில் பிசிசிஐயின் எலும்பு சோதனையில் பங்கேற்றார். அவர் ஏற்கெனவே இந்திய யு-19 அணியில் விளையாடினார். எனவே, நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவர் மீண்டும் வயது சோதனைக்கு உட்படுத்தப்படலாம். அவர் மிகவும் கடுமையாக உழைத்தார்.
எட்டு வயதாக இருக்கும்போதே 16 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். அவர் என்னுடைய மகன் மட்டுமல்ல தற்போது பீஹாரின் மகனாகவும் மாறியுள்ளார். அவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக நான் எனது நிலத்தை விற்றேன். நிதி பிரச்னைகள் இன்று வரை உள்ளன” என்று சூர்யவன்ஷியின் தந்தை தெரிவித்துள்ளார்.