தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் கரோனா: சிங்கப்பூரில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

சுவாமிநாதன்

சிங்கப்பூரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, முகக் கவசம் அணிய வேண்டும் என அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 56,043 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 32,035 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் ஒருநாளைக்கு 225 ஆக இருந்தது, டிசம்பர் முதல் வாரத்தில் 350 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூருக்கு வருவோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். விமான நிலையங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.