நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற விரேந்திர சிங்கும் தனது பத்ம ஸ்ரீ விருதைத் திருப்பி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவருக்கு எதிராக முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து பிரிஜ் பூஷண், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமானவர்கள் எவரும் மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து, ஜூன் 7-ம் தேதி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தைக் கைவிட்டார்கள்.
பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில் சஞ்சய் சிங் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பெரும்பாலான பதவிகளில் இவரது குழுவினரே வெற்றி பெற்றார்கள். சஞ்சய் சிங் உத்தரப் பிரதேச மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர். இவர் பிரிஜ் பூஷண் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர்.
இதற்கு அடுத்த நாள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இனி மல்யுத்த போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்த சாக்ஷி மாலிக் செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினார்.
சாக்ஷி மாலிக் கூறியதாவது:
"நாங்கள் உள்ளத்திலிருந்து போராடுகிறோம். ஆனால், பிரிஜ் பூஷண் போன்ற மனிதர்கள், அவரது தொழில் கூட்டாளி மற்றும் நெருக்கமானவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்வானதால், மல்யுத்த போட்டியை நான் கைவிடுகிறேன். இன்று முதல் என்னைக் களத்தில் பார்க்க முடியாது" என்றார் அவர்.
பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"உங்களுக்கு நிறைய பணிகள் இருக்கும். ஆனால், நாட்டின் மல்யுத்த வீரர்கள் மீது உங்கள் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக இதை நான் எழுதுகிறேன். இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகள் இந்தாண்டு ஜனவரியில் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கியது உங்களது கவனத்துக்கு வந்திருக்கும். இந்தப் போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் கொடுத்த பிறகே இந்தப் போராட்டமானது நிறுத்தப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்கள் ஆன பிறகும்கூட பிரிஜ் பூஷண் சிங் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. நாங்கள் ஏப்ரலில் மீண்டும் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் காரணமாகவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரியில் இவருக்கு எதிராக 19 புகார்கள் இருந்தன. ஏப்ரலில் இது 7 ஆக குறைந்தது. அதாவது பிரிஜ் பூஷண், 12 மல்யுத்த வீராங்கனைகளிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி புகாரைத் திரும்பப் பெற வைத்துள்ளார்.
இந்தப் போராட்டமானது 40 நாள்களுக்குச் சென்றது. அப்போது எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. எங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றோம். வேளாண் தலைவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது உங்களது அமைச்சரவையிலிருந்து வந்த அமைச்சர் ஒருவர் மிகவும் பொறுப்பாக எங்களிடம் வந்து நீதி கிடைக்கும் என உறுதியளித்தார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார். இதன் காரணமாக போராட்டமானது நிறுத்தப்பட்டது.
ஆனால், டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில், மல்யுத்த கூட்டமைப்பானது மீண்டும் பிரிஜ் பூஷண் சிங்கின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடுமையான அழுத்தத்துக்குள்ளான சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அன்றைய இரவு முழுவதையும் நாங்கள் கண்ணீரிலேயே கழித்தோம். என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்குப் புரியவில்லை. அரசு எங்களுக்கு நிறைய செய்துள்ளது. 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கௌரவித்தது. அர்ஜுனா, கேல் ரத்னா விருதுகளையும் நான் பெற்றுள்ளேன். இந்த விருதுகளைப் பெற்றபோதெல்லாம் வானில் மிதந்தேன். ஆனால், தற்போது வலிதான் மிகவும் பாரமாக உள்ளது. காரணம், ஒரு மல்யுத்த வீராங்கனை பாதுகாப்பு காரணத்தினால் போட்டியைவிட்டு விலகுகிறார்.
விளையாட்டு தடகள வீராங்கனைகளுக்கு அதிகாரத்தைப் பெற்று தந்துள்ளது. அது அவர்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. அனைத்து முதல் தலைமுறை தடகள வீராங்கனைகளுக்கே இந்தப் பெருமை சேரும்.
பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் விளம்பரத் தூதர்களாக இருந்த பெண்கள், அவர்களது விளையாட்டிலிருந்தே பின்வாங்குகிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை. மல்யுத்த வீரர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற விருதை நாங்கள் பெற்றுள்ளோம். மல்யுத்த வீராங்கனைகள் அவமதிக்கப்படும்போது, என்னால் பத்மஸ்ரீ விருதாளராக வாழ முடியாது. எனவே, இந்த விருதைத் திருப்பியளிக்கிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பஜ்ரங் புனியா.
இவரது வரிசையில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற விரேந்திர சிங் யாதவும் பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் விரேந்திர சிங் யாதவ் குறிப்பிட்டுள்ளதாவது:
"சகோதரிக்காகவும், நாட்டின் மகளுக்காகவும், நானும் எனது பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிக்கிறேன். உங்களது மகளும், எனது சகோதரியுமான சாக்ஷி மாலிக்கை எண்ணி பெருமை கொள்கிறேன்."
பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை பத்மஸ்ரீ விருதுடன் தில்லியிலுள்ள பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், விருதை பிரதமர் இல்லத்தின் வெளியே வைத்துவிட்டுச் சென்றார்.
பத்மஸ்ரீ விருதை புனியா திருப்பி அளித்தது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து போதுமான அளவுக்குப் பேசிவிட்டதாகக் கூறிய அனுராக், கருத்து கூறுவதைத் தவிர்த்துவிட்டார்.