சமீர் ரிஸ்வி படம்: இன்ஸ்டாகிராம் | டி20 உத்தரப் பிரதேசம் & கான்பூர் சூப்பர் ஸ்டார்
தற்போதைய செய்திகள்

ரூ. 8.4 கோடி: சிஎஸ்கே எடுத்த சமீர் ரிஸ்வி யார்?

சுவாமிநாதன்

ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சமீர் ரிஸ்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 8.4 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஷார்துல் தாக்குர் ஆகியோரைத் தேர்வு செய்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், சமீர் ரிஸ்வி பெயர் வந்தவுடன் ஏலத்தில் முனைப்பு காட்டியது. குஜராத் டைடன்ஸுடன் கடுமையாகப் போட்டியிட்டு ரூ. 8 கோடியைக் கடந்து ரூ. 8.40 கோடிக்கு ரிஸ்வியைத் தேர்வு செய்தது சென்னை அணி.

யார் இந்த சமீர் ரிஸ்வி?

சமீர் ரிஸ்வி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் யுபி டி20 லீக்கில் இரு சதங்கள் விளாசியிருக்கிறார். இந்தப் போட்டியில் 9 இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சையது முஷ்டாக் அலி கோப்பையிலும் இவர் கலக்கியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்துக்காக விளையாடியுள்ள சமீர் ரிஸ்வி 7 ஆட்டங்களில் 277 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 69.25, ஸ்டிரைக் ரேட் 139.89. 7 ஆட்டங்களில் 18 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சிக்ஸர் அடிக்கும் திறன், இவரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8.4 கோடி வரை அழைத்துச் சென்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸில் நடுவரிசை பேட்டர் அம்பதி ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால், இவரது இடத்தை சமீர் ரிஸ்வி நிரப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் உத்தரப் பிரேசத்துக்காக 4-வது வரிசை பேட்டராக விளையாடியுள்ளார். ராயுடு பாணியிலான ஆட்டத்திலிருந்து சற்று வேறுபட்டாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நடுவரிசை பேட்டிங்கில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.