விஜய்
விஜய் @actorvijay
தற்போதைய செய்திகள்

விஜயின் புதிய அரசியல் கட்சி: அரசியல் கட்சிகளின் கருத்துகள்

யோகேஷ் குமார்

நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சிக்கு, தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அவர்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே அரசியலுக்குள் நுழைந்துள்ளார் பிரபல நடிகர் விஜய். 'தமிழக வெற்றி கழகம்' என்கிற தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். இது குறித்து அரசியல் கட்சிகள் அவர்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜயின் புதிய அரசியல் கட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: “தொடங்குவது எளிது, தொடர்வது கடினம். தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் கடைசி வரை இருந்தால் எவரும் வெல்லலாம். அதில் தம்பி ஒன்றும் விதிவிலக்கல்ல. ஒரு நடிகரின் ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி வெற்றி பெற்றால் அது சரித்திர புரட்சியாகும். வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும், அது எம்.ஜி.ஆர் அவர்களிடம் இருந்தது. மக்களின் மனதை வெல்ல வேண்டும். ஆனால் அதைச் செய்யப் பல வருடங்கள் ஆகலாம். மக்கள் மனதை விஜய் வெல்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

விஜயின் புதிய அரசியல் கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது: “எல்லோரும் கட்சி ஆரம்பிக்கலாம். தமிழ்நாடு வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட ஒரு மாபெரும் இயக்கம் அஇஅதிமுக. அதனால் புதிய அரசியல் கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம், அது பெருங்கடல். அதில் நீந்திக் கரை சேர்ந்தவர்களும் உண்டு. மூழ்கிப் போனவர்களும் உண்டு. எனவே விஜய் கரை சேருவாரா? அல்லது மூழ்கிப் போவாரா? என்பதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.