கோப்புப் படம் ANI
தற்போதைய செய்திகள்

ஜார்க்கண்ட்: புறநகர் ரயில் மோதி இரண்டு பேர் பலி

ஜார்க்கண்ட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது புறநகர் ரயில் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

யோகேஷ் குமார்

ஜார்க்கண்ட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது புறநகர் ரயில் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் வித்யாசாகர் - காசிதார் இடையே அதிவிரைவு ரயில் நேற்று (புதன்கிழமை) இரவு நேரத்தில் சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து சிலர் இழுத்ததாகத் தெரிகிறது. இதனால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரயிலில் இருந்து சில பயணிகள் இறங்கி அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும், அப்போது அவ்வழியில் வந்த புறநகர் ரயில் நடந்து சென்றவர்கள் மீது மோதியதாகவும் தெரிகிறது. இந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில் இதுவரை இரண்டு உடல்களை மீட்டுள்ளதாக ஜம்தாரா ரயில் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார். ரயில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து குறைந்தது 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஜம்தாரா ரயில் நிலைய மேலாளர் அனந்த் குமார் பேசியதாவது, “கல்ஜாரியா ரயில் நிலையம் அருகில் அதிவிரைவு ரயில் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது புறநகர் ரயில் அவர்கள் மீது மோதியது. சிலர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதுவரை ரயில்வே பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் சேர்ந்து இரண்டு உடல்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.