கோப்புப்படம் ANI
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் திங்கள் முதல் கட்டண உயர்வு

கிழக்கு நியூஸ்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 அன்று கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கு முன்பு மார்ச் மாதத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவில்லை.

நேற்றைய தினம் மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிவுக்கு வந்ததால் ஜூன் 3 முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாகனங்களுக்கு ஏற்ப ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. பரனூர், ஆத்தூர், சூரப்பட்டு, வானகரம், வாணியம்பாடி, மாத்தூர், பூதக்குடி போன்ற சுங்கச் சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

சுங்கச் சாவடி கட்டண உயர்வால் லாரிகளில் கொண்டு செல்லப்படும் காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு.