மிக்ஜாம் புயல் வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படுவதற்கான டோக்கன் விநியோகம் டிசம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6,000-ஐ நிவாரணமாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார். புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ. 4 லட்சத்திலிருந்து, ரூ. 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் தாலுக்காக்களில் மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதற்கான டோக்கன் விநியோகம் டிசம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்தப் பணிகள் 10 நாள்களில் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார். ரேஷன் அட்டை இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அரசிடம் முறையிடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.