துவாரகா @narendramodi
தற்போதைய செய்திகள்

துவாரகா: கடலுக்கு அடியில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி

தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்தது தெய்வீக அனுபவமாக இருந்தது.

யோகேஷ் குமார்

குஜராத்தின் துவாரகாவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து கடலுக்குள் மூழ்கியதாகக் கூறப்படும் துவாரகா நகருக்கு சென்று கடலுக்கு அடியில் தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்களை மோடி தனது X தளத்தில் பதிவிட்டார்.

பூஜை செய்வதற்காகப் பாதுகாப்பு உடைகளை அணிந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சென்றார். மேலும் கடவுளுக்கு வழிபாடு செய்யும் வகையில் மயிலிறகையும் தனது கையில் எடுத்துச் சென்றார். ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்ற மோடி, தான் கொண்டு சென்ற மயிலிறகைத் தரையில் வைத்துச் சிறப்புப் பூஜை செய்தார். இதைத் தொடர்ந்து அந்த இடத்தைத் தொட்டு வணங்கிய பின் கடலிலிருந்து வெளியே வந்தார்.

மேலும் இது குறித்து மோடி தனது X தளத்தில், "தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்தது தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மீகத்துடன் இணைந்திருப்பதை நான் உணர்ந்தேன். கிருஷ்ண பகவான் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்றார்.

இதற்கு முன்பாக காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைக் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும், புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையையும் திறந்து வைத்தார்.