தற்போதைய செய்திகள்

பொன்முடி அமைச்சராவது எப்போது?: அப்பாவு தகவல்

யோகேஷ் குமார்

அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதன் மூலம், அவர் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

இதன் பிறகு, பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் ஆளுநர், மூன்று நாள் பயணமாக இன்று தில்லிக்குச் சென்றுள்ளார். இதனால் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குச் சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அது முறைப்படி நடக்கும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் எந்த பிரச்னையும் இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமான சட்டம்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.