முகமது ஷமி
முகமது ஷமி  ANI
தற்போதைய செய்திகள்

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்வதில் என்ன தவறு?: முகமது ஷமி கேள்வி

யோகேஷ் குமார்

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்வதில் என்ன தவறு என பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஷமி இன்னும் அணிக்குத் திரும்பவில்லை. உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தரையில் மண்டியிட்டதை, தொழுகை (ஸஜ்தா) செய்வதாக நினைத்துப் பலராலும் விமர்சிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:

“அனைத்து மதங்களிலும் மற்ற மதங்களைப் பிடிக்காத 5-10 நபர்கள் இருப்பார்கள். அதை நான் மறுக்கவில்லை. ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை உள்ளது? ஆயிரம் முறை கூட சொல்லலாம். அதேபோல அல்லாஹு அக்பர் என்று எனக்குச் சொல்லத் தோன்றினாலும் நான் சொல்வேன். இதில் என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது?" என்றார்.

மேலும் உலகக் கோப்பையில் நடந்த சம்பவம் குறித்து அவர் பேசியதாவது, “அந்த ஆட்டத்தில் நான் தொடர்ந்து 5 ஓவர்கள் வீசினேன். அதனால் மிகவும் சோர்வாக இருந்தேன். எனவே தரையில் நான் மண்டியிட்டேன். அப்போது பின்னால் இருந்து என்னை யாரோ தள்ளி விட்டனர். இதனால் நான் தொழுகை (ஸஜ்தா) செய்வதாக நினைத்துப் பலரும் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு தொல்லை செய்வதை நிறுத்த வேண்டும்.

நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமை கொள்கிறேன். இந்தியனாக இருப்பதற்கும் பெருமைப்படுகிறேன். எனக்கு நாடு தான் முக்கியம். இதுவெல்லாம் சிலரை உறுத்தினால், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.” என்றார்.