தற்போதைய செய்திகள்

கரூர் நெரிசல் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் | Karur Stampede |

சிபிஐ விசாரணை கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு...

கிழக்கு நியூஸ்

கரூர் நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 13 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 3 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார், தவெக தலைவர் விஜயைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், இதுகுறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று (அக். 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த வழக்​கில் சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்துத் தனி நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். அப்போது தவெக தரப்​பில் வாதங்​களை முன்​வைக்க வாய்ப்​பு அளிக்​கப்பட​வில்​லை. சட்​டம் - ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி காவல்துறையினர் தான் அந்த இடத்தை விட்டு செல்​லும்​படி விஜய்க்கு உத்​தர​விட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. தனி நீதிபதியின் உத்தரவு தவெகவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது ” என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து, “உயி​ரிழப்பு சம்​பவத்​தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்​துள்​ளது. உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஏற்​கெனவே சிபிஐ-​யில் பணி​யாற்​றிய அதி​காரி​யான வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு விசா​ரணைக்​ குழு விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது. விஜய் 7 மணி நேரம் தாமத​மாக கரூருக்கு வந்​த​தால்​தான் இந்த துயரச்​ சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்கு விஜய் மட்​டுமே தார்​மீக பொறுப்​பேற்க வேண்​டும்” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கரூர் சம்​பவத்​துக்கு போலீ​ஸாரின் அஜாக்​கிரதையே காரணம். இரவோடு இரவாக 41 உடல்களுக்கும் உடற்கூராய்வு நடத்தி முடிக்​கப்​பட்​டது. விசாரணைகள் தெளிவற்ற நிலையில் செல்கிறது” என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கரூர் கூட்ட நெரிசல் தொடர்​பான வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது, சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ”4 மணி நேரத்திற்குள் அனைத்து உடற்கூராய்வும் செய்யப்பட்டதா?” என்றும் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் அக்டோபர் 13 அன்று வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இந்த வழக்கும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.