திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டையின் அடிப்படையில் ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதன்பிறகு, நெல்லை வர்த்தக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்களைக் காத்ததைப்போல, தூத்துக்குடி மற்றும் நெல்லையைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களை அரசு காக்கும். சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொன்ன மழை அளவைவிட பல மடங்கு அதிகளவில் மழைப் பொழிவு இருந்தது. உதாரணத்துக்கு, காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்துள்ளது. மழைப் பொழிவு கடுமையானவுடன் 10 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மீட்புப் பணிக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
முன்னெச்சரிக்கையாக இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 19-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்து தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ளப் பாதிப்புகளுக்குத் தேவைப்படுகிற நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். தென் மாவட்டங்களுக்கு மட்டும் முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.
பெருமழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், கால்நடை இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும்.
மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ. 5 ஆயிரத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், மழையினால் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 13,500 ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு அல்லது அதற்கு மேல் சேதமடைந்திருந்தால், இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ. 18 ஆயிரத்திலிருந்து ரூ. 22,500 ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்களுக்கு ஹெக்டருக்கு 7,410 ரூபாயிலிருந்து 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், 33 ஆயிரம் ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மரி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு மீன்பிடி பலகை உள்பட 32 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த படகுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் வழங்கப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் இதர வட்டங்களுக்கும், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு இங்கு ரூ. 1,000 நிவாரணமாக வழங்கப்படும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.