தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழான கல்வித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வளாகத்தில் கடந்த 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் கடந்த 30-ம் தேதி அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பாஜகவுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளதால், உடல்நலனைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ள ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இது தனிப்பட்ட போராட்டம் அல்ல தமிழ்நாட்டின் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்துக்கானது என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி வேணுகோபால் உள்ளிட்ட பலரும் சசிகாந்த் செந்திலைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். மேலும், எம்.பி. கனிமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.