படம்: எக்ஸ் தளம் | வெளியுறவுத் துறை அமைச்சகம்
தற்போதைய செய்திகள்

ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி பேச்சு

சுவாமிநாதன்

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு, வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு இருநாட்டு கூட்டுறவு குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளார்கள்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

"இந்தியா-ஓமன் உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஓமன் நாட்டு சுல்தான் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களை மனபூர்வமாக வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"அரசியல், பாதுகாப்பு, வணிகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்கள் உறவு உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கி இரு நாட்டு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தங்களுடைய பார்வைகளையும் இவர்கள் பரிமாறிக்கொண்டார்கள்" என்றார் அவர்.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவத்ரா கூறுகையில், தகவல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம், பொருளாதாரக் குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.