கீப்பிங் செய்யும் அளவுக்கு உடற்தகுதியில் முன்னேற்றம் அடைந்தால் டி20 உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2022-ல் கார் விபத்தில் சிக்கிய பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இன்னும் பங்கேற்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என தில்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை ஜுன் 1-ல் தொடங்கவுள்ள நிலையில் ரிஷப் பந்த் அதில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்துவருகிறார். மேலும் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் அவர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் என்பதை அறிவிப்போம். டி20 உலகக் கோப்பையில் பந்த் விளையாடினால் அது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். எங்களின் மிகப்பெரிய சொத்து அவர். கீப்பிங் செய்தால் உலகக் கோப்பையில் விளையாடுவார். ஐபிஎல்-லில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்போம்” என்றார்.