நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய எம்.பி. இடைநீக்கம் செய்யப்படாமல் தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி, சு. வெங்கடேசன், ஜோதிமணி உள்பட மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது புதன்கிழமை மக்களவைக்குள் இருவர் நுழைந்த விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி, சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்பட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்காலக் கூட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். மாநிலங்களவையிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கனிமொழி, ஜோதிமணி, சு. வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து கனிமொழி கூறியதாவது:
"நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய எம்.பி. நாடாளுமன்றம் வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மஹுவா மொய்த்ரா வழக்கை எடுத்துக்கொண்டால், விசாரணை முழுமையாக நிறைவடைவதற்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், இந்த எம்.பி. (அனுமதிச் சீட்டு வழங்கிய எம்.பி.) இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. அவர் நாடாளுமன்றத்தில் எங்களுடன் அமர்ந்திருக்கிறார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினோம். அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?" என்றார் கனிமொழி.
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியதாவது:
"இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்தின் விதிகளுக்குள்பட்டே செயல்பட்டுள்ளார்கள். தவறான சொற்கள் எதையும் பயன்படுத்தவில்லை. இவர்களது இடைநீக்கம் முற்றிலும் தவறானது" என்றார் அவர்.