நடராஜன் @Jayaprakash Natraj
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நடராஜன்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாகப் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனைச் சந்தித்துள்ளார் நடராஜன்.

யோகேஷ் குமார்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான 32 வயது நடராஜன், இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் அவருடைய சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். 2022 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ரூ. 4 கோடிக்கு நடராஜனைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. தொடர்ந்து அந்த அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பாகப் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனைச் சந்தித்துள்ளார் நடராஜன். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இது குறித்து நடராஜனின் நெருங்கிய நண்பரான ஜெயபிரகாஷ் கூறியதாவது:

“நாங்கள் ஆனந்த் சீனிவாசன் அவர்களை சந்தித்தோம். அவர் 1976-ல் இருந்து மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர். மேலும் கபில் தேவின் தீவிர ரசிகர். கபில் தேவின் திறமை குறித்து நிறைய பேசினார். நிதி முதலீடு குறித்து பேசுபதற்காக அவரை சந்தித்தோம். ஆனால், முதல் 45 நிமிடங்கள் கிரிக்கெட் குறித்து பேசினோம். நடராஜனுக்கு பந்தின் வேகத்தை குறைத்து, அதிக ஸ்விங் செய்யுமாறு அறிவுரை வழங்கினார். மேலும் இன்னும் ஒரு டெஸ்டிலாவது நடராஜன் விளையாட வேண்டும் என வாழ்த்தினார். முடிவில் தமிழக அணி ரஞ்சி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அவரின் ஆசை எனக் கூறினார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. முதலீடே செல்வம்” என்றார்.