மு.க. அழகிரி @MkAlagiri_offl
தற்போதைய செய்திகள்

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கு: விடுதலையான மு.க. அழகிரி

யோகேஷ் குமார்

2011-ல் சட்டப்பேரவை தேர்தலின் போது வட்டாட்சியரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் விடுதலையானார் மு.க. அழகிரி.

கடந்த 2011-ல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி வாக்காளர்களுக்குச் சட்ட விரோதமாக ஓட்டுக்குப் பணம் கொடுத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோயிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாகப் புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2011 முதல் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மு.க. அழகிரி உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அந்த 17 நபர்களையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.