மேக்ஸ்வெல் ANI
தற்போதைய செய்திகள்

டி20யில் 5-வது சதம்: ரோஹித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்தார் மேக்ஸ்வெல்

யோகேஷ் குமார்

டி20 கிரிக்கெட்டில் தனது 5-வது சதத்தை அடித்து, டி20யில் அதிக சதமடித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்துள்ளார் ஆஸி. பேட்டர் கிளென் மேக்ஸ்வெல்.

மே.இ. தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டம் அடிலெய்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். மே.இ. தீவுகள் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 8 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 120 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. இதன் மூலம் மேக்ஸ்வெல் சர்வதேச டி20யில் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்தார். மேலும், சர்வதேச டி20யில் அதிக சதமடித்த வீரர் என்கிற ரோஹித் சர்மாவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து 242 ரன்கள் என்ற இலக்குடன் மே.இ. தீவுகள் அணி விளையாடி வருகிறது.