ஓய்வு பெற்றார் தவல் குல்கர்னி
ஓய்வு பெற்றார் தவல் குல்கர்னி @dhawal_kulkarni
தற்போதைய செய்திகள்

முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தவல் குல்கர்னி

யோகேஷ் குமார்

மும்பை அணியைச் சேர்ந்த தவல் குல்கர்னி, முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வெற்றியுடன் தன் பயணத்தை நிறைவு செய்தார் குல்கர்னி.

2014 முதல் 2016 வரை இந்திய அணிக்காக 12 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகளையும், இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

முதல்தர கிரிக்கெட்டில் 95 ஆட்டங்களில் விளையாடி 281 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது கடைசி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவர், ஆட்டத்தின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இது குறித்து குல்கர்னி கூறியதாவது: “ரஹானே கடைசியில் என்னிடம் பந்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. அதற்கு முன்பு தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தார், எனவே அவர்தான் கடைசியில் பந்துவீசுவார் என நினைத்தேன். ஆனால், பல ஆண்டுகளாக அணியை வழிநடத்திய நீங்கள் இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என ரஹானே கூறினார். இது எனக்கு 5-வது ரஞ்சி கோப்பை. ஒரு பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கி, வெற்றிகரமாக முடிப்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு” என்றார்.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடிய தவல் குல்கர்னி 92 ஆட்டங்களில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.