முதல்வர் பினராயி விஜயன் தன் மீது தாக்குதல் நடத்துவதற்காக சமூக விரோதிகளை அனுப்பியதாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தில்லி செல்வதற்காக திங்கள்கிழமை இரவு திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றுகொண்டிருந்தார். அப்போது எஸ்எஃப்ஐ செயற்பாட்டாளர்கள் ஆளுநரின் காரை நோக்கி கருப்புக் கொடி காட்டினார்கள். சில போராட்டக்காரர்கள் சாலையின் நடுப்புறம் சென்று ஆளுநரின் காரை மறித்தார்கள். காரில் இருந்து இறங்கிய ஆளுநர் போராட்டக்காரர்கள் காரின் இருபுறமும் தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சமூக விரோதிகளின் ராஜ்ஜியத்தை அனுமதிக்க முடியாது. இது மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு. முதல்வருக்கு இப்படியான பாதுகாப்பு ஏற்பாடுதான் செய்யப்படுமா? இது முதல்வரின் சதித் திட்டம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுநரின் செயல்பாடுகளுடன் உடன்படவில்லை என்பதற்காக, அவர் மீது தாக்குதல் நடத்த முதல்வர் சதித் திட்டத்தைத் தீட்டக் கூடாது" என்றார் கேரள ஆளுநர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 19 எஸ்எஃப்ஐ நிர்வாகிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். மேலும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவனந்தபுர காவல் ஆணையருக்கு கேரள காவல் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.